கோவை: கண்ணம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி விடுதியின் உணவகத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு உணவு உட்கொள்ள வந்த மாணவர்கள் அசைவ உணவு அதிகமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அதற்கு பணியிலிருந்த வட மாநில தொழிலாளர்கள் உணவு வழங்க மறுக்கவும், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோதலாக மாறிய நிலையில், விறகுக்காகப் பயன்படுத்தப்படும் கட்டைகளை எடுத்துக்கொண்டு இருதரப்பும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மாணவிகள் அதனை தங்களது செல்போனில் படம் பிடித்தனர். அதில் உணவு விடுதிக்குள் வட மாநில தொழிலாளர்களை மாணவர்கள் துரத்துவதும் உணவு விடுதிக்கு வெளியே மாணவர்களை காவல்துறையினர் ஜீப்பில் விரட்டி வரும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்தனர். ஏற்கனவே திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் உள்ளூர் தொழிலாளர்களைத் தாக்கும் வீடியோ வைரலான நிலையில் தற்போது இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் போலி டிராவல்ஸ் நடத்தி மோசடி; 19 கார்கள் மீட்பு!