கோவை: கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும்போது, குற்றவாளிகளை அடையாளம் காண காவல்துறையினருக்கு உதவியாக 'மோப்ப நாய்கள்' (sniffer dog) பயன்படுத்துவது வழக்கம். குற்றச்சம்பவம் நடைபெறும் இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கபட்டு அங்கு கிடைக்கும் தடயங்களை வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகிறது.
நாயின் வேகத்திற்கு ஏற்ப ஓடும் வகையில் ஆண் காவலர்கள் மோப்ப நாய்களுக்குப் பயிற்சி அளித்து கையாண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக கோவை மாநகர காவல்துறையில் மோப்ப நாய்களை கையாள்வதற்காக இரு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், கவிப்பிரியா(25), பவானி(26) ஆகிய இரு பெண் போலீசார், தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர். ஆறுமாதப் பயிற்சிக்குப் பிறகு, மோப்ப நாய்களைக் குற்ற சம்பவம் நடக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள்.
இதில் திருப்பூர் மாநகரில் உள்ள செல்லம் நகரைச் சேர்ந்த கவிப்பிரியா பிஎஸ்சி (இயற்பியல்), பிஎட், பிஏ (இந்தி) மற்றும் மனித வளத்தில் டிப்ளமோ படித்துள்ளார். காவலர் பவானி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பி.ஏ ஆங்கிலம் இலக்கியம் முடித்துள்ளார். கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் இருவரும் பயிற்சி பெற்றுள்ளனர். பயிற்சிக்குப் பிறகு, கோவை நகர ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றி வந்த நிலையில் இருவரும் இப்பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவலர் கவிப்பிரியா கூறுகையில், 'எனக்கு செல்லப்பிராணிகள் மிகவும் பிடிக்கும் பயிற்சியில் இருந்தபோது, கோவை மாநகரில் உள்ள துப்பறியும் நாய்ப் படை மற்றும் நாய்ப் பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் மோப்ப நாய்களை வரவழைத்து அவற்றின் திறன்களைக் காட்டினர்.
அப்போதே எனக்கு ஆர்வம் அதிகமானது. இந்த நேரத்தில் தான் துப்பறியும் நாய்களைக் கையாள விரும்புகிறீர்களா? என அதிகாரிகள் கேட்டார்கள். உடனே, நாய்களை கையாளும் விருப்பத்தைத் தெரிவித்தேன். இதனைத் தொடர்ந்து, என்னை இந்த பிரிவில் சேர்த்தனர்.
இதேபோல், என்னுடன் பணி புரியும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பவானியும் விருப்பம் தெரிவித்ததால் இருவருக்கும் பயிற்சி அளித்து வருகின்றனர். பவானி 2022ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தார். இருவரும் ஒன்றாகத் தான் பயிற்சி பெற்றோம்' என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மாநகர காவல் ஆணையர் அலுவலக கட்டடத்தில் அமைந்துள்ள துப்பறியும் நாய்ப் படை மற்றும் நாய்ப் பயிற்சி மையத்தில் பெண் காவலர் கவிப்பிரியாவுக்கு மோப்ப நாய் வில்மாவிற்கு பயிற்சி அளிக்கும் பணியும் (குற்றம் மற்றும் கொலை குற்றவாளிகளை கண்டறியும் நாய்) பெண் காவலர் பவானிக்கு மோப்ப நாய் மதனாவிற்கு பயிற்சி அளிக்கும் பணியும் (போதைப்பொருளை கண்டறியும் பணி) வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மே 1ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் கூறுகையில், 'ஆண் காவலர்கள் மட்டுமே துப்பறியும் நாய்களைக் கையாள்பவர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். பெண் காவலர்களுக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்து, இரண்டு பெண் காவலர்களை தேர்வு செய்து மோப்ப நாய்களைக் கையாள்பவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று காவல் ஆணையரின் அதிவிரைவு படையிலும் மூன்று பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக' தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிளம்பர், கொத்தனார், ஓட்டுநர் தேவையா? - வருகிறது தமிழக அரசின் 'செயலி'