கோயம்புத்தூர் முழுவதும் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில், நேற்று (செப். 7) இரவு பெய்த மழையால் செட்டி வீதி கே.சி. தோட்டம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்தது.
கண்ணன் என்பவருக்குச் சொந்தமான அந்த அடுக்குமாடி வீடு இடிந்ததில், கட்டட இடிபாடுகளில் எட்டுக்கும் மேற்பட்டோர் சிக்கினர். உடனடியாக, இது குறித்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புப் படை வீரர்கள் வெகுநேரம் போராடி இடிபாடுகளில் இருந்து 3 பேரை சடலமாகவும், 5 பேரை காயங்களுடனும் மீட்டனர். இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட ஐந்து பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இரண்டாவது நாளாக தொடர்ந்து இன்றும் மீட்புப் பணிகள் நடைபெற்றன. இதில் இன்று (செப். 8) கஸ்தூரியம்மாள் என்ற மூதாட்டி இடிபாடுகளில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மேலும் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இன்று (செப். 8) இடிபாடுகளில் சிக்கிய குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபடி, உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கும் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாயும், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாயும் என தலா நான்கு லட்சம் வழங்கினார்.
இதையும் படிங்க...உடுமலை ஆணவக்கொலை: சின்னசாமி விடுதலை உத்தரவை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு