கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முருக கடவுளை இழிவுபடுத்தும் வகையில், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி ஒரு காணொலியை பதிவேற்றம் செய்தது. இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும் அந்த யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்றும், அதில் பதிவேற்றம் செய்தவர்களை கூண்டோடு கைது செய்ய வேண்டும் என்றும் பல தரப்பினரும், பொதுமக்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இதற்கு சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் அதிகரித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட பாஜகவினர் காந்திபுரம் பகுதியிலுள்ள பாஜக அலுவலகம் முன்பு, காவடி எடுத்தும், முருகக் கடவுளைப் போற்றிப் பாடியும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார், “கறுப்பர் கூட்டத்தை கூண்டோடு கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். இன்று கோவையில் இருபத்தி ஐந்து மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், இரண்டு முக்கிய கோரிக்கைகளை தமிழ்நாடு அரசுக்கு முன்வைக்கிறோம்.
ஒன்று கறுப்பர் கூட்டத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், மற்றொன்று தைப்பூசத்தை தமிழ்நாடு அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்” என்றுத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் 1.5 கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனை!