கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக இன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் டிஜிபி சைலேந்திர பாபு சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.
இந்நிலையில் கார் வெடித்த இடத்தில் ஆணிகளும் கோலி குண்டுகளும் கிலோ கணக்கில் சிதறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை சென்னையில் இருந்து வந்த 6 பேர் கொண்ட தடய அறிவியல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கார் வெடித்ததில் கருகி உயிரிழந்தவர், கோவை கோட்டை மேடு பகுதியைச் சார்ந்த ஜமேஷா முபின் என்பது தெரியவந்துள்ளது. இவரது தந்தையின் பெயர் அப்துல்காதர் என்பதும் தெரியவந்துள்ளது. முன்னதாக ஜமேஷா முபினிடம் 2019ஆம் ஆண்டில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கார் வெடிக்கும்போது, அதில் இருந்த ஆணிகள் பல மீட்டர் தூரம் சென்று சிதறி விழுந்துள்ளது. மேலும் காரில் மூன்றுவிதமான ரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரித்துள்ளனர். இந்நிலையில் இது விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என்னும் கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை கார் விபத்து - திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயலா?