கோயம்புத்தூர்: கோவை பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பார்த்திபன் (31), சக்திவேல் (60). இருவரும் பெயிண்டர்களாக வேலை செய்து வந்தனர். தென்காசியை சேர்ந்த முருகானந்தம் (55) கோவையில் தங்கி சமையல்காரராக பணியாற்றி வந்தார். நண்பர்களான மூவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட மது அருந்தியுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள பழைய கட்டடத்தில் இரவு முழுவதும் மது அருந்தியுள்ளனர். மது அருந்திவிட்டு காலையில் மூவரும் வீட்டிற்கு கிளம்பியுள்ளனர். சக்திவேல் போதை அதிகமானதால் செல்லும் வழியில் கீழே அமர்ந்துள்ளார். உட்கார்ந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். அவரைத் தொடர்ந்து முருகானந்தம் செல்லும் வழியிலேயே சாலையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
விஷம் கலந்த மது
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பார்த்திபனும் அவரது வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்கள் மது அருந்திய இடத்திற்கு சென்று மது அருந்த பயன்படுத்திய டம்ளர், கைரேகை, மதுபாட்டில் ஆகியவற்றை எடுத்து சென்றனர்.
இவ்விவகாரத்தை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரணை நடத்த வந்த நிலையில், மூவர் உயிரிழப்பு குறித்து திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் அருந்திய மதுவில் டின்னர் கலந்ததாக கூறப்பட்ட நிலையில் விஷம் கலந்திருந்தது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. முன்பகை காரணமாக மதுவில் விஷம் கலந்து கொலை செய்த அப்பகுதியை சேர்ந்த ராஜசேகர் (63) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Sivakasi Fancy fireworks explodes: பேன்சி ரக பட்டாசுகள் வெடித்து விபத்து - இருவர் காயம்