கோவை காந்திபுரம் 100 அடி சாலை முதல் ராமகிருஷ்ணா சாலைவரை 75 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் 55 அடி உயரத்தில் இரண்டாவது அடுக்கு மேம்பாலமாக கட்டப்பட்டதால் வாகனங்கள் பாலத்தின் மேல் பயணிப்பதில் சிரமம் ஏற்படும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். ஆனால், வாகனங்கள் பயணிக்கும் விதமாகவே பாலம் கட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உறுதியளித்தனர்.
இந்நிலையில், காந்திபுரம் இரண்டாவது அடுக்கு மேம்பாலத்தில் இரு சக்கர வாகனங்களின் சோதனை ஓட்டம் கடந்த 8, 9ஆம் தேதிகளிளும், அதைத் தொடா்ந்து 10 முதல் 14ஆம் தேதி வரை நான்கு சக்கர மற்றும் இலகு ரக வாகனங்களின் சோதனை ஓட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள 55 அடி உயர மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள தலைமை செயலகத்திலிருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார்.
2017ஆம் ஆண்டு இந்த மேம்பாலம் பணிகள் தொடங்கப்பட்டு இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த மேம்பாலம் 1.75 கிலோ மீட்டர் நீளமும், 11.6 மீட்டர் அகலத்திலும் கட்டப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, " 75 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த மேம்பாலத்தை முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார். கோவையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் அவினாசி சாலையில் 9.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாலம் கட்டப்பட்டுவருகிறது. கூடிய விரைவில் அதுவும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மேலும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார். கோவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்திவருகிறார்" என்றார்.
இதையும் படிங்க: இசையமைப்பாளருக்கே டஃப் கொடுக்கும் கோயில் யானை: மவுத் ஆர்கன் வாசித்து அசத்தல்