கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஏ.பி.டி. சாலையில் உள்ள நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 27 குழந்தைகள் படிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு ஊழியர்கள் மதிய உணவு வழங்கினார்கள். பின்னர் குழந்தைகளை உறங்க வைப்பதற்காக அங்கிருந்த பாயை எடுத்தபோது அதில் ஐந்தடி நீளமுள்ள நாகப்பாம்பு இருந்ததைக் கண்டு பயந்த குழந்தைகளும் ஊழியர்களும் அந்த அறையைவிட்டு வெளியே ஓடினர்.
அதையடுத்து வனத்துறையினருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததால் குழந்தைகளும் ஆசிரியர்களும் அங்கன்வாடி மையத்துக்குள் செல்லாமல் வெளியே செய்வதறியாது நின்றுகொண்டிருந்தனர். இதனால் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, அங்கு வந்த கால்நடை உதவியாளர் வினோத் குமார், அறையில் மரப்பெட்டிக்குள் தஞ்சமடைந்திருந்த பாம்பை பிடிக்க முற்பட்டபோது, பாம்பு அரைமணி நேரத்துக்கும் மேலாகப் படமெடுத்து ஆடியது. பின் ஒருவழியாக அந்த ஐந்தடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்தார்.
அங்கன்வாடி மையத்தைச் சுற்றிலும் பல மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ள நிலையில், மேற்கூரைகள் பெயர்ந்து காணப்படுவதால் அடிக்கடி பாம்புகள் உள்ளே புகுந்து விடுகிறது எனப் பள்ளி மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பலமுறை அலுவலர்களிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மேற்படி விபரீதம் நடக்காமல் இருக்க உடனடியாக பள்ளி வளாகத்தை சுற்றி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பூந்தமல்லி அருகே பாம்பு கடித்து கர்ப்பிணி உயிரிழப்பு!