கோயம்புத்தூர்: காவிரி பிரச்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, கர்நாடக முதமைச்சர் சித்தராமையாவை சந்தித்து தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 12ஆயிரத்து500 கன அடி தண்ணீரை கர்நாடகம் திறக்க, மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் தற்போது திமுகவின் நெருங்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் சித்தராமையா தான் கர்நாடக முதலமைச்சராக இருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பெங்களூரு சென்றால், விமான நிலையத்திற்கே நேரில் வந்து வரவேற்கும் அளவுக்கு மிகமிக நெருங்கிய நண்பரான சிவக்குமார் தான், கர்நாடக துணை முதலமைச்சராகவும், நீர்வளத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்பு விழாவுக்கும், இந்திய கூட்டணி கட்சி கூட்டத்துக்கும் பெங்களூரு சென்று, அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவகுமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் அன்பை பொழிந்தவர்தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
அப்போதெல்லாம் காவிர் பிரச்னை பற்றி கவலைப்படாமல், இப்போது தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நாடகமாடி வருகிறார். இந்த நாடகத்தை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற, உடனடியாக பெங்களூரு சென்று நெருங்கிய நண்பர்களாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோரை சந்தித்து, தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும்.
இந்தியாவை காப்பாற்றதான் இந்திய கூட்டணியை உருவாக்கியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் திரும்ப திரும்ப கூறி வருகிறார். இந்த கூட்டணி, காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் என்றால், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நாடகமாடும் என்றால் இந்த கூட்டணியில் தமிழ்நாட்டிற்கு என்ன பலன்? தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை பெற்றுத்தர முடியாத இந்த கூட்டணி, மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கு எப்படியெல்லாம் துரோகம் இழைக்கும் என்பதை தமிழ்நாடு மக்கள் நினைத்துப் பார்க்க தொடங்கி விட்டார்கள்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கும்போது எந்தப் பிரச்னையும் இல்லாமல் தமிழ்நாட்டிற்கு முறையாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 4 மாதங்களே ஆகியிருக்கும் நிலையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் இல்லாமல் துரோகம் தான் பரிசாக கிடைத்திருக்கிறது. இதுதான் திமுக ஆட்சி நடத்தும் லட்சணம்.
தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பெரும் பகுதி மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி நீரே உள்ளது. பெரும்பாலான கூட்டுக்குடிநீர் திட்டங்கள் காவிரி நீரை நம்பியே உள்ளன. எனவே, காவிரி பிரச்னை என்பது ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் மிகமிக முக்கியமான பிரச்னை. இப்படி அதி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையில் கூட, கூட்டணி கட்சியான காங்கிரஸுடம் பேசி, காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் பேசி காவிரி நீரை பெற திமுக அரசால், முதலமைச்சர் ஸ்டாலினால் முடியவில்லை.
காவிரி நீரைககூட தர மறுக்கும் காங்கிரஸ் கட்சியுடன், தமிழ்நாட்டின் உரிமையை, தமிழர்களின் வாழ்வாதாரத்தை காவு கொடுத்து எதற்கு காங்கிரஸுடன் கூட்டணி. அதிகார பசிக்காக, அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டு விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காவு கொடுக்கும் திமுகவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோரை சந்தித்து, தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும். தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறக்குமாறு கர்நாடக முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு உத்தரவிடுமாறு, சோனியா, ராகுலிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Locanto app cheating: வலைத்தளம் மூலம் வலைவிரிக்கும் லோகாண்டோ.. போலீஸ் எச்சரிக்கை!