கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக 10 மாதங்களுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடியிருந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் செயல்பட அரசு அனுமதி அளித்தது.
இந்தச் சூழ்நிலையில் 2020-21 பொதுத்தேர்வு எழுதும் 10, 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்காக நாளை (ஜன. 19) முதல் பள்ளிகள் இயங்க அரசு அனுமதி வழங்கியது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளிகள், மேல் நிலைப்பள்ளிகள் அனைத்தையும் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள 346 அரசு, தனியார் உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தையும் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய காணிக்கை அன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 'சமூக இடைவெளியைக் கடைபிடி, முகக் கவசத்தை மறவாதே, வெளியில் விற்கும் உணவுப் பொருள்களை வாங்காதே, வீட்டிலிருந்து குடிநீரைக் கொண்டு வா' போன்ற விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாளை(ஜனவரி 19) வரவிருக்கும் மாணவர்கள் எவ்வாறு பள்ளிகளில் இருக்க வேண்டும், வகுப்பு இடைவெளிகளில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் என்னென்ன என்று பொதுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதையும் படிங்க... பள்ளிகளில் தூய்மைப் பணி தீவிரம்