கோயம்புத்தூர்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்திருந்த நிலையில், கோவை மண்டலத்தில் இருந்து வெளியூர்களுக்கு 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பண்டிகைக் காலம் மற்றும் சிறப்பு விடுப்புகள் போன்ற காலங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். குறிப்பாக தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் மற்றும் கோடை விடுமுறை போன்ற முக்கிய தினங்களின் போது, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அரசு தரப்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அந்த வகையில், வரும் டிச.25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் கோவை மண்டலத்தில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தில் வருகின்ற கிறிஸ்துமஸ் பண்டிகையை (25:12.2023) முன்னிட்டு, 22.12.2023 முதல் 26.12.2023 வரை கோயம்புத்தூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மதுரை, திருச்செந்தூர், திருநெல்வேலி, நாகர்கோயில், தேனி, திருச்சி, தஞ்சாவூர், சேலம், உதகை போன்ற ஊர்களுக்கு செல்லவும் மற்றும் மீண்டும் ஊர் திரும்பவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடுதலாக 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: பொன்முடி சொத்துக்கள் முடக்கம் - சிறப்பு நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!