கோயம்புத்தூர் முழுவதும் நேற்றிலிருந்து (ஜன. 06) பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் சாலையோரம் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி சாக்கடைகளுக்குள் செல்கிறது.
அதே சமயம் மழைநீரினால் சாலையோரம் இருக்கும் குழிகளும் நிரம்பி நீர் வெளியேறிவருகிறது. இதனால் மக்கள் சிலர் குழியிருப்பது தெரியாமல் குழிக்குள் விழும் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்துவருகின்றன.
இந்நிலையில் கோவையில் இரு குழந்தைகள் நடந்துவரும்போது சாலையோரம் இருக்கும் குழியை ஒரு குழந்தை கட்டைகள் போட்டு அடைப்பதும் அக்குழந்தைக்கு அருகில் உள்ள குழந்தை குடை பிடிப்பதும் போன்ற காணொலி பல்வேறு வாட்ஸ்அப், சமூக வலைதளங்களில் பரவி வைரலாகிவருகிறது.
மாநகராட்சி நிர்வாகம் செய்யக்கூடிய இந்த வேலையை பிஞ்சு குழந்தைகள் செய்தது பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. இந்தக் காணொலி கோவையில் எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இக்குழந்தைக்கு வாழ்த்துகள் தெரிவித்துப் பலரும் இந்தக் காணொலியைப் பகிர்ந்துவருகின்றனர்.