கோயம்புத்தூர்: வஉசி மைதானத்தில், "எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" என்ற முதலமைச்சர் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இந்த கண்காட்சியை தினந்தோறும் பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று நாட்டுப்புற பாடல் கலைஞர்களான செந்தில் - ராஜலட்சுமி ஆகியோர் கண்காட்சியை பார்வையிட்டனர். அப்போது, கோவை மேயர் கல்பனா ஆனந்த்குமார் உடனிருந்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் “முதலமைச்சருடைய உழைப்பு, அவர் கடந்து வந்த பாதை, அனைத்தும் பார்க்கும்போது வியக்காமல் இருக்க முடியாது. ஆரம்ப காலத்தில் இருந்து தொண்டராக, இளைஞர் அணி செயலாளராக, கொஞ்சம் கொஞ்சமாக தன்னைத் தானே பொது வாழ்க்கையில் அர்ப்பணித்து பல கஷ்டங்களை அனுபவித்து இன்றைக்கு அவர் நம்முடைய முதல்வராக வந்துள்ளார்.
உண்மையில் அவர் பட்ட கஷ்டங்களுக்கும் உழைப்புக்கு மக்கள் கொடுத்த அன்பு வெற்றியைத் தான் பார்க்க வேண்டும். இதனை பார்க்க ஒரு மணி நேரம் போதாது. இதனை பார்க்கும்போது முதல்வர் 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்த அந்த புகைப்படங்கள் பேசுகிறது. ஒரு வருடம் சிறையில் இருந்த காட்சியை பார்க்கும்போது, ஒரு மாதிரி நெகிழ்வாக இருந்தது. ஒரு தலைவன் எப்படி எல்லாம் உருவாகி இருக்கிறார் என்பதற்கு இது மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
முதல்வர் திட்டத்தை உருவாக்கி மக்களிடத்தில் இதனை கொண்டு சேர்ப்பதற்கு எங்களுக்கு சந்தோஷமாக உள்ளது. முதல்வர் அவர்கள் நல்ல தந்தையாக, மகனாக, தொண்டனாக, தலைவனாக இருந்திருக்கிறார். எங்களுக்கு பிடித்த புகைப்படம் பெரியாருடன் முதல்வர் நின்ற புகைப்படம். இட்லி செந்திலுக்கு பிடிக்கும். அதே போல, முதல்வர் அவர்களுக்கு அவரது துணைவியார் இட்லி பறிமாறும் புகைப்படம் எங்களுக்கு மிகவும் பிடித்தது. இசைக்கருவி வாசிப்பது போல புகைப்படம் இருந்தது, அதுவும் எங்களுக்கு மிகவும் பிடித்தது. மிசாவில் கைதாகி சிறையில் இருந்துள்ளார்.
அவர் பட்ட கஷ்டங்கள் பயங்கரமாக உயர்ந்தது. சித்தரவதை அனுபவித்துள்ளார். மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்து இன்றைக்கு தமிழ்நாட்டுடைய முதல்வராக அழகாக ஆட்சி செய்து வருகின்றார். அன்பு மட்டுமே நாங்கள் கொடுக்க முடியும், அவருடைய சேவை இன்னும் தொடர வேண்டும். நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருக்க கடவுளை வேண்டுகிறோம். பெருநகரங்களில் இது போன்ற புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது போல, கிராம பகுதிகளிலும் இது போன்ற கண்காட்சி நடத்தப்பட வேண்டும்” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை புத்தகத் திருவிழா - பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தொடங்கி வைப்பு