கோவை மாவட்டம் வைய்யம்பாளையத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணிமண்டபத்தையும், நாராயணசாமி நாயுடுவின் உருவ சிலையை திறந்துவைத்தார் .
பின்னர் கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2011-ல் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவிற்கு மணிமண்டபம் கட்டப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்ட நிலையில், அதை செயல்படுத்தும் விதமாக 1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த மணிமண்டபத்தை அரசின் சார்பில் கட்டி முடித்து இருப்பதாகவும் இதை திறப்பதில் பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தில் விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டியது இந்த அரசு என தெரிவித்த அவர், அவினாசி அத்திக்கடவு திட்டம் 1,652 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், பிப்ரவரி மாத இறுதிக்குள் அவினாசி-அத்திகடவு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவினாசி அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் பகுதி 2-ல் சேர்க்கப்படும் எனவும், அன்னூர் மேற்கு, காரமடை, எஸ்.எஸ்.குளம், பெரிய நாயக்கன்பாளையம் உட்பட சில பகுதிகளும் இத்திட்டத்தில் சேர்க்க ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசுடன் பேசி கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்ற இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் கோதாவரியில் இருந்து 2,000 டி.எம்.சி, தண்ணீர் கடலில் வீணாகும் நிலையில், கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மூலம் தெலங்கானா, ஆந்திரா மூலமாக தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்
இதன் மூலம் காவிரியை நம்பியுள்ள 20 டெல்டா மாவட்டங்கள் பயன்னடையும் தண்ணீர் இல்லாதபோது, டெல்டா மாவட்டங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.