திரைப்படங்களுக்கும், தமிழ்நாடு அரசியலுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. அதேபோல திரைப்படங்கள் ரசிகர்களிடையே ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. திரைப்பட நாயகர்களைப் போல நடை, உடை, பாவனைகளை மாற்றி கொண்டு அலைபவர்கள் ஏராளம். அதேசமயம் திரைப்படங்களைப் பார்த்து குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் "மெட்ரோ" திரைப்படத்தைப் பார்த்து வழிப்பறி நுட்பங்களை பழகியதாக கோவை அருகே கைதான இளைஞர்கள் அளித்துள்ள வாக்கு மூலம் காவல்துறையினரிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து, கருமத்தம்பட்டி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான தனிப்படை காவலர்கள், வாகன தணிக்கையைத் தீவிரப்படுத்தினர்.
இதன் பலனாக கருமத்தம்பட்டி நான்குரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த சரண் என்பவர் பிடிபட்டார். சரணிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் பல்வேறு இடங்களில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செல்போன் மற்றும் நகைகளை பறித்துச் சென்றது தெரியவந்தது. மேலும் கமலக்கண்ணன்(30), கோபாலகிருஷ்ணன்(19), சந்தோஷ்குமார்(26), பாண்டீஸ்வரன்(22) ஆகியோருடன் சேர்ந்து வழிப்பறி சம்பவங்களை அரங்கேற்றியதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அந்த ஐந்து பேரையும் கருமத்தம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். இதனிடையே கைது செய்யப்பட்ட சரண் அளித்த வாக்குமூலம் காவல் துறையினரையே அதிர வைத்தது. கோவை மாவட்டம் வாகராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரண் (20) டிப்ளமோ படிப்பு முடித்துள்ளார். அவர் வேலையில்லாமல் இருந்தபோது 'மெட்ரோ' திரைப்படத்தைப் பார்த்துள்ளார். அதில் கதாநாயகனின் சகோதரர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, நண்பர்களுடன் இணைந்து மாட்டிக்கொள்ளாமல் எளிதாக, பெண்களிடம் நகைப் பறிப்பது மற்றும் வழிப்பறியில் ஈடுபடுவது பற்றிய நுட்பங்களை அறிந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அதன்படி நகை பறிக்க தேர்வு செய்யும் இடத்தைச் சுற்றியுள்ள சந்து பொந்துகள் அனைத்தையும் அறிந்த பின்னர், தனியாக இருக்கும் பெண்களின் கவனம் வேறு ஒன்றில் இருக்கும் சமயம் பார்த்து வழிப்பறி செய்துள்ளனர். இதில், கருமத்தம்பட்டி, அன்னூர், சத்தியமங்கலம், பவானி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்டவர்களிடம் வழிப்பறி செய்ததாக பிடிபட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார். முதலில் தனது நண்பர் கமலக்கண்ணனை இந்தச் சம்பவத்தில் இணைத்துக்கொண்டதாகவும், அதன்பின்னர் மற்ற நண்பர்களையும் இந்த நகைப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுத்தியதாகவும் சரண் தெரிவித்தார்.
இதேபோன்று கணியூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் நடத்திய வாகனச் சோதனையின் போது, கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட அபிஷேக், குமார், இம்மானுவேல் ஆகியார் கைது செய்யப்பட்டனர். நடந்து செல்லும் பெண்களிடம் நகைப் பறிப்பு மற்றும் திருட்டு, செல்போன் பறிப்பு ஆகிய குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவர்கள், வாட்ஸ்அப் குழு தொடங்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். ஆடம்பரமாக வாழ நினைக்கும் இளைஞர்களைத் தேர்வு செய்து குழுவில் இணைத்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
இவர்கள் அனைவரும் ஒன்றாக வெளியூர் கிளம்பி செல்வது போல் சென்று வழிநெடுக, வழிப்பறியில் ஈடுபட்டு, அதன் மூலம் வரும் பணத்தில் ஆடம்பரமாக இருந்ததோடு, தங்களது காதலிகளுக்கு ஆடம்பரச் செலவு செய்ததாகவும் கூறியுள்ளனர். எளிதாக தப்பிச் செல்ல இந்த வழிப்பறி சம்பவங்களுக்கு உயர் ரக இன்ஜின் கொண்ட இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டால், வாழ்க்கையைத் தொலைக்க நேரிடும் என்பதற்கு இந்த இளைஞர்கள் மற்றுமொரு உதாரணம்.
இதையும் படிங்க: பொதுமக்கள் தண்ணீர் தொட்டியில் குடிநீர் பிடிக்க சூயெஸ் நிறுவனம் எதிர்ப்பு