கோவை மாவட்டம் சூலூர் கலங்கல் சாலை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மனைவி தெய்வானை (80). இவர் சூலூர் பொன்விழா கலையரங்கம் அருகே நேற்று (புதன்கிழமை) மாலை நடந்து சென்று கொண்டிருந்தார் அப்பொழுது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் தெய்வானை கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு பைக்கில் வேகமாகத் தப்பிச் சென்றார்.அப்போது ஒரு திருப்பம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த அந்த நபர் தடுமாறி கீழே விழுந்தார்.
இந்நிலையில் மூதாட்டி திருடன் திருடன் என்று கூச்சலிடவே அங்கிருந்த இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் அந்த நபரைத் துரத்திச் சென்றனர் அதற்குள் அந்த நபர் அங்கிருந்த பொதுக்கழிப்பிடம் ஒன்றுக்குள் நுழைந்து கதவை உட்புறமாக தாழிட்டு வெளியே வர மறுத்தார்.
அதனைத் தொடர்ந்து இளைஞர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே இருந்த அந்த நபரை வெளியே இழுத்து வந்து தர்ம அடி கொடுத்து மரத்தில் கட்டிவைத்தனர். மேலும், அவர் வந்த பைக்கை சோதனை செய்தபோது நான்கு நம்பர் பிலேட்டுகள் இருந்துள்ளன. இதனையடுத்து சூலூர் காவல்துறையினரிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார்.
அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் ரவி என்கின்ற ரவிச்சந்திரன் என்பதும் மதுரையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அவரது இருசக்கர வாகனத்தில் 4 நம்பர் பிலேட்டுகள் உள்ளதால் அவர் இதுபோன்ற பல்வேறு வழிபறி சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கக் கூடும் என்ற கோணத்தில் அவரிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.