கோவை தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற 'புற்று நோய்க்கு எதிரான போர்' என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஷ்வினிகுமார் சௌபே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கேன்சர் போன்ற நோய்களுக்கு இந்தியாவில் சர்வதேச தரத்தில் சிகிச்சைகள் கிடைக்கிறது.
வரும் 2025ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய சுகாதாரத் துறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்று தெரிவித்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாடு முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதேபோல நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் எய்மஸ் மருத்துவமனையை அமைக்க திட்டமிட்டுள்ளோம். சேலம், மதுரை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோமியம் விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்படும். அதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன” என்றார்.