கோவை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது, கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. அங்கு காவல் துறையினரின் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், மொத்தம் 144 கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டு, 24 மணி நேரம் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் இருந்து பெரும்பாலான கேமராக்கள் இயங்கவில்லை என்று அரசியல் கட்சி முகவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜாமணியிடம் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கண்காணிப்புக் கேமராக்களை சரி செய்யும் பணியில் தொழில்நுட்பப் பிரிவினர் ஈடுபட்டனர்.