பொள்ளாச்சியில் ஏராளமான இளம் பெண்களுடன் நட்பாகப் பழகி, ஏமாற்றி ஆபாசமாக படம்பிடித்து ஒரு கும்பல் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தமிழ்நாட்டையே உலுக்கியது.
இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியான அதிமுகவின் முக்கியப் பிரமுகர் ஒருவரின் வாரிசுகளுக்கு நேரடியாகத் தொடர்பிருப்பதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி பெரும் பேசு பொருளாக மாறியிருந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை சிபிசிஐடி-யிடம் இருந்து சிபிஐ வசம் மாற்றப்பட்டது. இதையடுத்து, ஏழு ஆண்டுகளாக இந்த சித்ரவதைகள் நீடித்தது தொடர்பாகவும், அரசியல் கட்சியினரின் தலையீடு குறித்தும், வேறு முக்கியப் புள்ளிகள் யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? என்றும் சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.
இதை, வெளிப்படையாக மேற்கொள்ளாமல், சிபிசிஐடி காவல் துறையினரிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து ரகசியமாக சிபிஐ நூதன முறையில் விசாரணையைத் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, காவல் துறையினருக்கே முறையான தகவல்கள் இல்லாததால் அவர்களே கலக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.