கோவை சிறுமுகை அருகே மோத்தேபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (25). இவர், கடந்த 2016 ஜூலை 22ஆம் தேதி அதே பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்தில் தனது செல்போனில் ஆபாச காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அதைப் பார்த்த தினேஷ்குமாரின் உறவினரான 16 வயது சிறுமி, ஆபாச படம் பார்ப்பது குறித்து வீட்டில் கூறுவேன் என்று தெரிவித்துள்ளார். வீட்டுக்குத் தகவல் தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என்று கருதிய தினேஷ்குமார், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கொன்றுவிட்டுத் தப்பியோடிவிட்டார்.
இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தினேஷ்குமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், வழக்கை விசாரித்த கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெ.ராதிகா, சிறுமியைக் கொலை செய்த குற்றத்துக்காக ஒரு ஆயுள் தண்டனையும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு (‘போக்சோ’) சட்டப்படி மற்றுமொறு ஆயுள் தண்டனையும், தடயங்களை அழித்த குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.