கோடைக்காலத்தை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு - கேரள எல்லையில் உள்ள ஆனைகட்டி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் நிலவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக யானைகள், தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைவது அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஆனைகட்டியை அடுத்த கேரள எல்லையான கோட்டத்துரை கிராமத்திற்குள் நேற்று மூன்று யானைகள் நுழைந்தன. குட்டியோடு வந்த இரண்டு யானைகள் அங்குள்ள ஒரு தனியார் தோட்டத்தில் புகுந்தன. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கேரள வனத் துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென அங்கிருந்த ஆண் யானை வனத் துறையினரை துரத்தியது. இதனைக் கண்டு பயந்துபோன வனத் துறையினர் யானையிடமிருந்து தப்பித்து ஓடினர். இதைத்தொடர்ந்து பட்டாசு வெடித்து யானைகளை வனத் துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.