கோவையை அடுத்த மருதமலையை ஒட்டியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான யானைகள், காட்டெருமைகள், மான்கள், சிறுத்தைகள் உள்பட பல வனவிலங்குகள் உள்ளன. தற்போது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் இருந்து யானைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் தண்ணீர் தேடி அருகிலுள்ள கிராமப் பகுதிக்குள் வருவது வாடிக்கையாகி உள்ளது.
அவ்வாறு நேற்றிரவு (மே 29) தண்ணீர் தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மூன்று வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று, பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதி அருகே தண்ணீருக்காக சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த தெருநாய்கள் ஒன்று சேர்ந்து புள்ளி மானை துரத்திக் கடித்ததில், படுகாயம் அடைந்த மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் மானின் உடலை மீட்டு வனப்பகுதியில் புதைத்தனர்.