கோவை செட்டி வீதிப் பகுதியில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து இறுதிகட்ட வாகன பரப்புரை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், இந்தத் தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல். இந்தத் தேர்தலில் எந்தக் கட்சியும் விலைவாசி குறித்து பேசவில்லை. அந்த அளவிற்கு விலைவாசிகள் பாஜக ஆட்சியில் கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது எனப் புகழாரம் சூட்டினார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு தமிழர்களின் காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு என விமர்சித்த வீடியோ வெளியாகியுள்ளது என சுட்டிக்காட்டிப் பேசிய அவர், நாட்டு மாடுகளைக் காக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து, சுப்பிரமணியன் சுவாமி ஒரு சுதந்திரமானவர். அவர் டிடிவி தினகரன், சசிகலாவிற்கு ஆதரவாக ட்வீட் செய்வது அவரது சொந்தக் கருத்து. அக்கருத்து பாஜகவை ஒருபோதும் பாதிக்காது என விளக்கமளித்தார்.
மேலும், நாடு முழுவதும் பாஜக வெற்றிபெறும் எனவும் நாடு, வீடு, மாடு காக்க மோடிக்கு வாக்களிக்க வேண்டும் எனக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.