கோயம்புத்தூர்: கோடநாடு வழக்கு விசாரணையானது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகத் தனிப்படை போலீசார் 320 பேரிடம் விசாரணை மேற்கொண்டு 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையின் நகல்கள் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும், சிபிசிஐடி புலனாய்வு அதிகாரிகளிடமும் ஒப்படைத்துள்ளனர்.
இந்தநிலையில் கோடநாடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலிசார் ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் 700 க்கும் மேற்பட்ட தொலைப்பேசி உரையாடல்கள் வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கோடநாடு சம்பவம் நடைபெற்ற போது நீலகிரி மாவட்ட எஸ்பியாக முரளி ரம்பா இருந்துள்ளார். தற்போது அவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோடநாடு வழக்கு தொடர்பாக ஆவணங்களை மலையாள மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்தது தொடர்பாக மணிகண்டனுக்கும், சாட்சிகளின் அடிப்படையில் விசாரணைக்காக கர்சன் செல்வம் மற்றும் ஜெயசீலன் ஆகிய 3 பேரை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அதன்படி 3 பேரும் நேற்று (பிப்.7) காலை 10:30 மணி அளவில் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகினர். ஆஜராகிய 3 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல மதியத்திற்கு மேல் தலைமை காவலர் ஜேக்கப், உதவி ஆய்வாளர் அர்ஜுனன், எஸ்டேட் கணக்காளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று ஒவ்வொருவரிடமும் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த விசாரணையில் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து விசாரணைக்கு பின்பு கர்சன் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, "கோடநாடு எஸ்டேட் வழக்கில் எனக்கு 3ம் தேதி சம்மன் கொடுத்தார்கள். அதில் 7ம் தேதி என்னை ஆஜராகச் சொன்னார்கள். கேள்வி கேட்டார்கள். நான் பதில் சொன்னேன். முதன் முறையாகத் தான் நான் வருகிறேன். 3 மணி நேரம் எனக்கு விசாரணை நடைபெற்றது. அவர்கள் கூறியதைச் சொல்லக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்கள்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தைப்பூசம் நிறைவு; பழனி முருகன் கோயிலில் தெப்பத்தேர் பவனி!