கோயம்புத்தூர்: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று (அக்.17) இந்த வழக்கு தொடர்பாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அய்யப்பனை விசாரணைக்கு அழைத்திருந்தனர்.
காலை 10 மணிக்கு துவங்கிய இந்த விசாரணை மாலை 6 மணி வரை நடைபெற்றது. விசாரணைக்கு பின் ஓட்டுநர் அய்யப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஓட்டுநர் கனகராஜ் தொடர்பான கேள்விகளையே சிபிசிஐடி போலீசார் கேட்டனர். ஓட்டுநராக இருந்தபோது அவர் குறித்து தெரிந்த தகவல்களைத் தெரிவித்தேன்.
குறிப்பாக கனகராஜின் நடவடிக்கைகள், கேரக்டர் தொடர்பாகவே கேள்விகள் கேட்டனர். 3 சிபிசிஐடி அதிகாரிகள் இந்த விசாரணையில் இருந்தனர். 2 ஆண்டுகள் தான் கனகராஜ் டிரைவராக இருந்தார். ஜெயலலிதாவிடம் 6 -7 ஓட்டுநர்கள் இருந்தோம். ஜெயலலிதாவிற்கு என்னை தவிர கண்ணன் என்ற ஓட்டுநரும் இருந்தார். கனகராஜ் ஜெயலலிதாவிற்கு ஓட்டுநராக இல்லை. அவர் அலுவலக வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.
இரவு நேரங்களில் அவர் இருப்பார். ஓட்டுநர்கள் அரசியல் வாதிகளுடன் தொடர்பில் இருக்க முடியாது. ஜெயலலிதாவிற்கு அது பிடிக்காது. கனகராஜ் அப்போது பேச்சுலராக இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் கோடநாடு எஸ்டேட் சென்றுள்ளேன். பங்களாவிற்கு உள்ளே அனுமதி கிடையாது.
இதையும் படிங்க: சிதம்பரம் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறதா? - ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
தனிப்பட்ட முறையில் யாரும் செல்ல முடியாது. ஜெயலலிதாவை பங்களா வாசலில் விட்டு விட்டு வந்து விடுவோம்.
ஓட்டுநர் கனகராஜ் எங்கள் எல்லோருக்கும் சங்கடத்தை கொடுத்துவிட்டார். கனகராஜ் வேலையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் அரசியல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். சிபிசிஐடி விசாரணை திருப்திகரமாக இருந்தது. எழுத்துப்பூர்வமாகவும் வாக்குமூலம் பெறப்பட்டது.
சிபிசிஐடி தரப்பில் எந்தவித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. ஓட்டுநர் கனகராஜ் முறையாக பணி செய்யவில்லை என்பதால் அவர் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். நான் 2021 மே மாதம் சொந்த காரணங்களால் போயஸ் கார்டனில் இருந்து வெளியேறினேன். தற்போது எந்த பணியிலும் இல்லை.
30 ஆண்டுகளாக போயஸ் கார்டனில் பணியாற்றி உள்ளேன்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் காலிப்பணியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்