கோவை பீளமேடு லால்பகதூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆண் பூனை ஒன்றை வளர்த்துவருகிறார். அதற்கு 'லுடு' எனப் பெயரிட்டு குடும்பத்தில் ஒருவராகப் பார்த்துவருகிறார்.
இந்நிலையில், கடந்த வாரம் வீட்டைவிட்டு வெளியே சென்ற லுடு, இதுவரை வீடு திரும்பாததால் பிரவீன் குடும்பத்தார் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனையடுத்து, பூனை காணவில்லை என நோட்டீஸ் அச்சடித்து அப்பகுதி மக்களிடம் வழங்கிவருகின்றனர்.
அதில், பூனையின் அடையாளத்தைக் குறிப்பிட்டு யாரேனும் பார்த்தாலோ அல்லது கொண்டுவந்து கொடுத்தாலோ கவர்ச்சிகரமான வெகுமதி அளிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பூனையின் உரிமையாளரிடம் பேசுகையில், "நாட்டு ரக ஆண் பூனையை கடந்த ஐந்து ஆண்டுகளாக வளர்த்துவருகின்றோம். வீட்டில் உள்ள அனைவரும் அதன் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளதால், பூனை காணாமல்போனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எப்படியாவது பூனையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் அதன் புகைப்படத்தைக் கொண்டு நோட்டீஸ் அடித்து அனைத்துப் பகுதிகளிலும் விநியோகம்செய்துள்ளோம். அதில் எங்களுடைய தொடர்பு எண்ணையும் குறிப்பிட்டுள்ளதால் விரைவில் எங்களுடைய செல்லப் பூனை 'லுடு' கிடைக்கும் என நம்புகிறேன்" என்றார்.