கோயம்புத்தூர்: சக்தி சாலையில் நேற்று நான்கு சக்கர வாகனத்தை ஒருவர் தாறுமாக ஓட்டி சென்றுள்ளார் . இதனால் சாலையில் சென்ற பலர் அலறியடித்துக் கொண்டு விலகி ஓடினர். சில வாகனங்களின் மீது அந்த நான்கு கார் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்போது அப்பகுதி மக்கள் அந்த வாகனத்தை நிறுத்த முற்படும் போது, வாகனத்தை நிறுத்தாமல் அந்த நபர் வாகனத்தை இயக்கி சென்றுள்ளார்.
அப்போது பொதுமக்களில் சிலர் அந்த காரை விரட்டி சென்று மடக்கினர். இந்நிலையில் அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் எதையும் பொருட்படுத்தாமல் மேற்கொண்டு மீண்டும் வாகனத்தை வேகமாக இயக்கி அங்கிருந்து சென்றுள்ளார். இந்த நிலையில் வேகமாகச் சென்ற அந்த நான்கு சக்கர வாகனம் சிவானந்தபுரம் விவேகானந்தர் நகர்ப் பகுதியிலிருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. அந்த விபத்தில், வாகனத்தை ஓட்டி வந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் கூடி அந்த வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர், இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் நான்கு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர் கோவை சரவணம்பட்டி அடுத்த விநாயகபுரம் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பதும், அவர் சரவணம்பட்டி பகுதியில் உணவகம் நடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரவிந்த் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது. தற்போது அந்த வாகனம் சாலையில் தாறுமாறாக ஓட்டும் காட்சிகளும் பொதுமக்கள் அந்த வாகனத்தை விரட்டி சென்று மடக்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.