கோயம்புத்தூர்: கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது. தற்போது சுமார் 20 நாட்களாகியும், இப்போருக்கு ஒரு முடிவு எட்டப்படவில்லை. நாளுக்கு நாள் போரின் வீரியம் அதிகரித்துதான் வருகிறது. அங்குள்ள மக்கள், குறிப்பாக குழந்தைகள் என அனைவரும் தங்கள் வீடு, உடமைகள் மற்றும் உறவினர்கள் என அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.
மீட்கப்பட்ட சிலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் அவரவர் சொந்த நாடுகளுக்கு பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த போரில் இதுவரை 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் எனவும், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஐ.நா மூலமாக இந்தியாவும், பாலஸ்தீன மக்களுக்குத் தேவையான நிவாரணத்தையும், ஆதரவையும் வழங்கி வருகிறது.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 24ஆம் தேதி அனைத்து ஜமாத், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உக்கடம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் பொழுது உக்கடம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் மீது ஏறி, பாலஸ்தீன கொடியை சிலர் பறக்கவிட்ட சம்பவம் அரங்கேறியது. இதற்கு பலத்த கண்டங்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பைச் சேர்ந்த சபீர் அலி, மனித நேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அபுதாஹிர், ரபீக் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143, 341, 290 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் உக்கடம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தென்காசியில் களைகட்டிய நவராத்திரி; பரதநாட்டியம் ஆடி அசத்திய மாணவிகள்!