சென்னை: ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண் ஒருவர் நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் இருந்த 70 லட்சம் ரூபாய் பணம் பெற்று திருமணம் செய்யாமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக சென்னை சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்தார்.
நடிகர் ஆர்யா மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தரும்படியும் அந்தப்புகாரில் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் ஆர்யாவை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், நடிகர் ஆர்யாவுக்கும், இந்த வழக்குக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியானது. மேலும், நடிகர் ஆர்யா பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி, அவர்போல பேசி ஜெர்மனி பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் நேற்று (ஆகஸ்ட் 24) கைது செய்தனர்.
இந்நிலையில், இன்று(ஆகஸ்ட் 25) கோவை சாய்பாபா காலனியில் நடிகர் ஆர்யாவின் வழக்கறிஞர் ஜெரோம் ஜோசப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "சென்னை சைபர் கிரைம் போலீசார் ஆர்யா பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு தொடங்கி மோசடி செய்த நபர்களை கைது செய்துள்ளனர்.
இந்த புகாருக்கும், நடிகர் ஆர்யாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கைதான இருவரும் இதேபோன்று பல்வேறு மோசடிகள் செய்து இருக்கின்றனர். பணப் பரிவர்த்தனை நடந்த வங்கி கணக்கு மூலம் உண்மையான குற்றவாளிகள் கைதாகியுள்ளனர்.
இவ்விவகாரத்தில் உண்மை நிலை தெரியும் முன்பே நடிகர் ஆர்யா மீது மோசமான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டது. ஆர்யா தலைமறைவாகிவிட்டார், மும்பை ஓடிவிட்டார் என பலவிதமாக சமூக வலைதளங்களில் தவறான விமர்சனம் செய்தவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய இருக்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: நடிகர் ஆர்யா குரலில் இளம்பெண்களிடம் மோசடி: நடந்தது என்ன?