கோயம்புத்தூர், பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே சென்ற கார் ஒன்று, காவல் துறையினர் தடுத்தும் நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளது.
இதனையடுத்து காவல் துறையினர் அந்தக் காரை விரட்டிப் பிடித்தனர். தொடர்ந்து காரிலிருந்த இருவரிடமும் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பிடிபட்டவர்கள் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த உதயநிதி, ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த தன்ராஜ் என்பதும் தெரியவந்தது. அதுமட்டுமல்லாது பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு வேன், மூன்று கார்கள், நான்கு இருசக்கர வாகனங்களைத் திருடிய வழக்கில் அவர்களுக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து திருடப்பட்ட 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எட்டு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
கைதான உதயநிதி மீது தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் திருட்டு வழக்குகளும், தன்ராஜ் மீது கோயம்புத்தூரில் திருட்டு வழக்கும், விருதுநகரில் கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கும் ஏற்கனவே பதியப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.