கோயம்புத்தூர் மாவட்டம் ஜி.கே.என்.எம். சிக்னல் அருகேவுள்ள பெட்ரோல் பங்கிற்கு நேற்றிரவு (நவ. 01) 11:30 மணியளவில் தனியார் டாக்சி வாகனம் ஒன்று டீசல் நிரப்பச் சென்றுள்ளது.
அப்போதும், பெட்ரோல் பங்கிற்குள் நுழையும்போது, காரின் முன்புறம் புகை வெளிவந்ததால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் டீசல் நிரப்பாமல் காரை பெட்ரோல் பங்கிற்கு எதிரே எடுத்துச் செல்லும்படி கூறியுள்ளனர்.
இதனையடுத்து பெட்ரோல் பங்கிற்கு எதிரே காரை நிறுத்திவிட்டு காரின் முன்புறமுள்ள பேனட்டை திறந்தபோது, அதிலிருந்து தீப்பொறி வெளிவந்துள்ளது. உடனடியாக காரின் ஓட்டுநர், காரைவிட்டு தள்ளிச் சென்றுள்ளார்.
பின்னர், பெட்ரோல் பங்கில் இருக்கும் தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை அணைக்க முயன்றும் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இயலவில்லை. தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அவ்வழியாக வரும் வாகனங்களை மாற்றுப் பாதையில் அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, கார் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், காரை ஓட்டிவந்தவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அழகர் என்பதும், ஆர்எஸ் புரத்தில் தற்போது குடியிருப்பதும் தெரியவந்தது.
மேலும், காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறின் காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. பெட்ரோல் பங்க் ஊழியர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து