குனியமுத்தூர் சிந்துநகரைச் சேர்ந்தவர் சஜின். இவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் போக்குவரத்து புலனாய்வு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் வின்சென்ட்குமார் கட்டட உள்அலங்கார நிறுவனம் நடத்திவருகிறார்.
இவர்களுக்கு கேரளா மாநிலம் பாலக்காட்டில் சொந்தமாக வீடு உள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன் சஜின், கணவர் வின்சென்ட்குமார் பாலக்காட்டில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளனர். இன்று (பிப்.16) காலை மீண்டும் பணிக்குச் செல்ல சஜின் தனது காரில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து அவரை இறக்கி விட்டு பின் வின்சென்ட்குமார் மீண்டும் பாலக்காடு நோக்கிச் சென்றுள்ளார்.
அப்போது, கார் மதுக்கரை மரப்பாலம் அருகே வந்தபோது பின்னால் காரில் வந்த 6 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், வின்சென்ட் சென்ற காரை தடுத்து நிறுத்தி அவரை இரும்பு கம்பியால் தாக்கியதுடன், அவரை கிழே தள்ளிவிட்டு அவரது காரை கடத்திக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து வின்சென்ட் சிகிச்சைக்காக மதுக்கரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மதுக்கரை காவல் துறையினர் தனிப்படை அமைத்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல் ஆய்வாளரின் கணவரை தாக்கி காரை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஹாட் சிப்ஸ் உரிமையாளரின் கார் கடத்தல் - ஜிபிஎஸ் மூலம் டிராக் செய்து பிடித்த காவல்துறை!