கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்திலிருந்து கேஸ் கம்பெனி செல்லும் மேட்டுப்பாளையம் சாலையில் இன்று காலை கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. கேஸ் கம்பெனி அருகே வரும்போது, முன்னால் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தை முந்த முயன்றபோது கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையின் நடுவிலுள்ள தடுப்பில் பேருந்து ஏறி நின்றது.
மேலும் பேருந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது. வாகனத்தை ஓட்டிவந்த சின்ன தடாகத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். ஆனால் நல்வாய்ப்பாக சிறு காயத்துடன் அவர் உயிர் தப்பினார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். பேருந்தின் முன் கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. இந்நிலையில் அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் பேருந்து ஓட்டுநரைத் தாக்க முயன்றனர். அதற்குள் அவர் தப்பி ஓடினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர், அடிபட்ட சந்திரசேகரை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பேருந்தை காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
இது குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறும்போது, கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சில தனியார் பேருந்துகள் தினமும் அதிவேகமாகச் செல்கின்றன. சாலையில் செல்பவர்களை அவர்கள் அச்சுறுத்தும்விதமாக செல்கின்றன. இது குறித்து போக்குவரத்துத் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.