டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறக் கோரி பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுக்காமல் அங்கிருந்த காவல் துறையினர் அமைதியாக இருந்ததைக் கண்டித்தும், மேலும் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் கோவையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த அமைப்பைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் குனியமுத்தூரில் உள்ள மத்திய தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முற்றுகையில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசைக் கண்டித்தும், கலவரத்தில் போராட்டக்காரர்களைத் தாக்கிய காவல் துறையினரைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். மேலும் அவர்கள் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட சென்றபோது, காவல் துறையினர் அவர்களைக் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.
செய்தியாளர்களிடம் பேசிய கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவர் அபுதாஹீர், டெல்லியில் அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வேண்டுமென்றே ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் உள்ளே நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தவிடாமல் தடுத்ததாகவும், இதை அங்குள்ள காவல் துறையினர் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இந்து, இஸ்லாமிய மக்களிடையே மதரீதியான பிரச்னையை தூண்டி விடவே இதுபோன்ற துப்பாக்கிச் சூடு நடத்துவதாக கூறிய அவர், இது தொடர்பாக மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் கூறினார். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மத்திய அரசின் அலுவலகங்கள் அனைத்தையும் முற்றுகையிட உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
இதையும் படிங்க: 'வன்முறை வெறியாட்டத்திலிருந்து இந்தியா மீண்டுவர விழைகிறேன்' - கமல் ட்வீட்