கோவை: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் நேரு காலனியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மனைவி மாலதி. இவர் கடந்த 22ம் தேதி காலை சுமார் 6 மணிக்கு அப்பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். அங்கிருந்த செடி ஒன்றில் பூப்பறித்துள்ளார். அப்போது பைக்கில் வந்த இரு நபர்கள் மாலதியின் கழுத்தில் இருந்த 5 சவரன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினர். மாலதி அளித்த புகாரின் பேரில் மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் டி.கோட்டாம்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது இருவர் வழிமறித்துள்ளனர். கத்தியைக் காட்டி மிரட்டிய அந்த இருவரும் சிவக்குமாரிடம் இருந்து பணம் ரூ. 500 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இந்த தகவல் கிடைத்ததும் மகாலிங்கபுரம் போலீசார் பல்லடம் ரோடு 5 முக்கு பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பைக்கில் வந்த இருவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதையடுத்து சந்தேகத்தின் பேரில் இருவரையும் போலீசார் மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் இருவரும் மாலதியிடம் செயின் பறித்தவர்கள் என்றும், சிவக்குமாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவர்கள் என்றும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "மாலதி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வழிப்பறி கொள்ளையர்கள் யார் என்பதை உறுதி செய்தோம். அதற்குள் அந்த இருவரும் சிவக்குமாரிடமும் வழிப்பறியில் ஈடுபட்ட தகவல் கிடைத்தது.
வாகன சோதனையில் சிக்கிய அந்த இருவர் கோவை உக்கடத்தைச் சேர்ந்த சாகுல் அமீது, அவரது தம்பி ஷாஜகான் என்பதும், இருவரும் சேர்ந்துதான் இந்த வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தோம்.
இவர்கள் ஓட்டி வந்த பைக்கும் கேரளாவில் இருந்து திருடப்பட்டது. அந்த பைக்கையும் பறிமுதல் செய்துள்ளோம். இதில் அண்ணன் சாகுல் அமீது மீது கோவை, போத்தனூர், செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன" இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் விபத்து!