கோவை சாய்பாபா காலனியை அடுத்த அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அழகுராஜா (55) மற்றும் சேகர்(53). சகோதரர்களான இருவரும் கூலி வேலை செய்து, தங்களது பிழைப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி சொத்துப் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று அழகுராஜா தனக்குத் தெரியாமல், வேறு ஒருவரிடம் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளதாக சேகர், அவரது அம்மாவிடம் கூறியுள்ளார். ஆனால் அதை அழகுராஜா மறுத்திட, கோபமடைந்த சேகர் அருகிலிருந்த கத்தியை எடுத்து அழகுராஜாவை குத்தியுள்ளார்.
இதை நேரில் கண்ட அவரின் தாய் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் அழகுராஜாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள், அழகுராஜா ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து சேகரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வீட்டை தன் பெயருக்கு மாற்றி தராததால், கோபத்தில் குத்தியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். சொத்துப் பிரச்னையில் உடன்பிறந்த அண்ணனை தம்பிக் கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தர்பூசணியில் பீர் தயாரித்து விற்பனை - சிறுவன் உட்பட இருவர் கைது