தமிழ்நாட்டில் பாஜகவினரின் வேல் யாத்திரைக்கு அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் பாஜக மாநில தலைவர் எல். முருகன் தலைமையில் அக்கட்சியினர் தொடர்ந்து வேல் யாத்திரையை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூரில் நவம்பர் 22 ஆம் தேதி சிவானந்த காலனி பகுதியில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் தலைமையில் வேல் யாத்திரை, பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர் சதானந்த கெளடா கலந்து கொள்கிறார். இதற்கான வேலைகள் சிவானந்த காலனி பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார் உடனிருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்ததாவது, "கோயம்புத்தூர் வருகை தரும் பாஜக மாநில தலைவர் எல். முருகனுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் சதானந்த கெளடா கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். பொதுக்கூட்டத்தின் நோக்கம் பாஜக அரசால் மக்கள் அடைந்துள்ள நன்மைகளை விளக்கத்தான். வேல் யாத்திரையை கண்டு அரசு அரண்டுள்ளது. கோயம்புத்தூரில் நடைபெறும் வேல்யாத்திரை, பொதுக்கூட்டத்தை அரசு தடுக்க நினைத்தாலும், தடையை மீறி நடத்துவோம்" என்றார்.
இதையும் படிங்க: வேல் யாத்திரையில் இரட்டை வேடம் போடும் எடப்பாடி'- கொதிக்கும் தங்க தமிழ் செல்வன்!