பிரெயில் என்ற எழுத்து முறை பார்வை மாற்றுத்திறனாளிகள் படிக்க உருவாக்கப்பட்ட முறையாகும். இதில் ஒவ்வொரு எழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்ட செவ்வக வடிவ கலத்தில் பொறிக்கப்பட்டவை. இந்தச் செவ்வக கட்டத்தில் ஒவ்வொரு எழுத்துகளும் துளையின் மூலம் சுட்டிக் காட்டப்படும். பார்வை மாற்றுத்திறனாளிகள் தொடு உணர்வின் மூலம் இந்த எழுத்துகளைக் கண்டறிகின்றனர். இந்த எழுத்து முறையை ஃபிரான்ஸ் நாட்டு லூயிஸ் பிரெயில் 1824ஆம் ஆண்டு தோற்றுவித்தார்.
இந்த முறையை அறிமுகம் செய்தபோது ஒரு சிலர் மட்டுமே படித்துவந்த நிலையில், தற்போது பார்வை மாற்றுத்திறனாளிகள் அனைவருமே படிக்கத் தொடங்கிவிட்டனர். பல்கலைக்கழகத்திலும் பள்ளி கல்லூரிகளும்கூட இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.
இம்முறை பொது இடங்களில் வரைபடமாக வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று கூறிவந்த நிலையில், தற்போது கோவை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில் கோவை ரயில் நிலையத்தின் முழு கட்டட அமைப்பும் பொறிக்கப்பட்டுள்ளது. நுழைவாயில், பயணச்சீட்டு பதிவு செய்யும் இடம், தளங்கள், கழிவறை, படிகள், தானியங்கி படிகள் போன்ற அனைத்தும் பொறிக்கப்பட்டுள்ளன. இது மிகவும் நன்மை அளிக்கிறது என்கின்றனர் பார்வை மாற்றுத்திறனாளிகள்.
இது குறித்து பேசிய தமிழ்நாடு மேற்கு மண்டல பார்வை மாற்றுத்திறனாளிகள் தேசிய இணையத்தின் ஒருங்கிணைப்பாளர் டி. சதாசிவம், “இது பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த உதவியாக இருக்கும். புதிதாக வரும் பார்வை மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களின் உதவியை நாட அவசியம் இருக்காது" எனத் தெரிவித்தார்.