கோவை: தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் உள்ள பெண் குழந்தைகளுக்கென தொடங்கப்பட்ட திட்டம் மோடியின் மகள் திட்டம். இந்த திட்டம் கோவையில் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் சேவை மையத்தின் சார்பில் நடைபெற்ற இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்வில் பாஜக மகளிர் ஆணைய தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு 100 பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " மோடி மகள் திட்டத்தின் மூலம் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் உள்ள பெண் குழந்தைகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு தேவையான கல்வி, உதவிகள் கிடைக்கும். நன்றாக படிக்கக்கூடிய பெண் குழந்தைகளுக்கு ஐந்து ஆண்டுகள் கழித்தும் உதவிகள் கிடைக்கும். அருந்தி ராய் புத்தகத்தை நீக்கவேண்டும் என ஏபிவிபி அமைப்பு மட்டும் கோரிக்கை வைக்கவில்லை. பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை வைத்தன.
மத்திய அரசின் செயல்பாடுகளை, மக்களுக்கு அறிவித்த திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கென்று திட்டமிடப்பட்டதுதான் வேல்யாத்திரை. அரசு இதற்கு ஒத்துழைப்பு அளித்து சுமுகமான முறையில் நடத்தியிருக்கவேண்டும். அதற்கு பதிலாக யாத்திரையில் கலந்துகொள்பவர்களை கைது செய்தது. சட்டத்திற்கு விரோதமாக வேல்யாத்திரை நடந்தது போன்ற தோற்றத்தை பலரும் உருவாக்குகிறார்கள். வேல் யாத்திரை நடத்துவதால் ஏதேனும் வழக்குகள் எங்கள் மீது வந்தால் அதை சந்திக்கத் தயாராக இருக்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: அருந்ததி ராய் புத்தகம் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கம் - கல்வியாளர்கள் கண்டனம்