கோவை: சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவியும், கோவை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளரைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது வரவேற்புக்குரியது.
இந்த வழக்கைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி வழங்கப்படும் என்ற உறுதியை தமிழ்நாடு மக்களுக்கு கொடுக்க அவர் மறந்தார் அல்லது மறைத்தார். பொறுப்பேற்றுக் கொண்ட சிறிது காலத்திலேயே இந்த வழக்கின் மூலமாக முதலமைச்சர் மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் வேண்டும் என்று பாஜக தற்பொழுதும் போராடிக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி என மாநிலத் தலைவர் அறிவித்துள்ளார். இனி தொடர்ந்து கோவை மாவட்டத்தில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : 'உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப்போட்டி: ஆனாலும் கூட்டணி தொடரும்!'