கோவையில் புலியகுளம் கருப்பராயன் கோயில் வீதியில் நாற்பது ஆண்டுகள் பழமையான அரச மரம் ஒன்று உள்ளது. அந்த அரச மரத்தின் அடியில் சிறிய விநாயகர் சிலை வைத்து, அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் அந்த மரம் காய்ந்து பட்டுப்போகும் நிலை ஏற்படவே, அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அந்த மரத்திற்கு தினமும் தண்ணீர் ஊற்றி அம்மரத்தை பாதுகாத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் புத்துணர்வு பெற்ற அம்மரம் பசுமையாக காட்சியளிக்கத் தொடங்கியது. இந்நிலையில், பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள அம்மரத்திற்கு ஆண்டுதோறும் பிறந்த நாள் கொண்டாடுவது என முடிவு செய்த அப்பகுதி இளைஞர்கள், மரத்திற்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.
கேக் வெட்டிய பின் ஒரு துண்டு கேக்கினை மரத்தின் அடியில் வைத்து நன்றி செலுத்திய இளைஞர்கள், அப்பகுதி மக்களுக்கும் கேக் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தங்கள் பகுதியின் அடையாளமாக இருக்கும் அரச மரத்திற்கு, இனி ஆண்டுதோறும் பிறந்தநாள் கொண்டாடுவது என முடிவு செய்து இருப்பதாகவும் இளைஞர்கள் தெரிவித்தனர்.
மேலும், மரத்தின் அடிப்பகுதியில் சிமெண்ட் மூலம் மேடை செய்து, விநாயகர் சிலையினை பொது மக்கள் வழிபாட்டிற்கு வைக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மரத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக இளைஞர்கள் பிறந்த நாள் கொண்டாடிய இச்சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சமூக வலைதளங்களில் வைரலான ஸ்டாலினின் ஸ்டைலிஸ் படம்!