பாரதியார் பல்கலைக்கழகத்தின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான பிஎச்.டி (முனைவர் பட்டப் படிப்பு) பயிலும் ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுச்சுருக்கம், ஆய்வு சமர்ப்பித்தல் போன்ற கட்டணங்கள் கடந்தாண்டு ரூ.7 ஆயிரமாக இருந்தது.
தற்போது 120 விழுக்காடு, அதாவது ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆய்வுச்சுருக்கத்திற்கான கட்டணமும் ரூ.3,500லிருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்தக் கட்டண உயர்வை கண்டித்து 15க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் தகுந்த இடைவெளியுடன் நின்று, பதாகைகளை ஏந்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
இதில் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
மாணவர்களின் கோரிக்கையை உயர் அலுவலர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறியதை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் பெரும்பாலும் ஊக்கத் தொகை இல்லாமலே ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்கின்றனர்.
மேலும் ஏழை எளிய, மற்றும் முதல் தலைமுறை மாணவர்களின் உயர்கல்வி வாழ்க்கையை இது போன்ற கட்டண உயர்வு கேள்விக்குறியாக்கும் என்பதை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்!