கோவை: கோவை விமான நிலையத்தில் நேற்று(ஜன.23) காலை சாஜாவிலிருந்து வந்த ஏர் அரேபியா விமான பயணிகளிடம் இமிகிரேஷன் அதிகாரிகள் வழக்கமான சோதனை மேற்கொண்டனர். அப்போது, கொல்கத்தா முகவரியுடன் கூடிய பாஸ்போர்ட்டில் வந்த அன்வர் உசேன் என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அன்வர் உசேனிடம் இமிகிரேஷன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அன்வர் உசேனை தேசிய கீதம் பாடிக் காட்டும்படி அதிகாரிகள் அறிவுறுத்திய நிலையில், அவர் பாடத் தெரியாமல் முழித்துள்ளார். இதனையடுத்து அன்வர் உசேனிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தியபோது, அவர் பங்களாதேஷ் சேர்ந்தவர் என்பதும், போலியான ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அன்வர் உசேன், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பனியன் நிறுவனத்தில் டைலராக வேலை பார்த்ததாகவும், பின்னர் பெங்களுரில் உள்ள ஏஜென்ஸி முலம் போலியான ஆதார் கார்டை தயாரித்து, கொல்கத்தா முகவரியை காட்டி பாஸ்போர்ட் வாங்கி இருப்பதும் தெரியவந்தது. 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பாஸ்போர்டை பயன்படுத்தி அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்- திருப்பூரில் கிடைக்கும் அளவுக்கு மட்டுமே அங்கேயும் ஊதியம் கிடைத்ததால் மீண்டும் திருப்பூர் திரும்ப முடிவு செய்து, கோவை வந்துள்ளதாக தெரியவந்தது.
இதனையடுத்து கோவை விமான நிலைய இமிகிரேசன் அதிகாரிகள், பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, பீளமேடு போலீசார் அன்வர் உசேனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.. 4 பேர் கைது; 9 பெண்கள் மீட்பு!