கோயம்புத்தூர்: கோவை வனக்கோட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில், காட்டு யானை மற்றும் ஏராளமான வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அடர் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் நீர் நிலைகளைத் தேடி அலையும் காட்டு யானைகள், இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, வனப்பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களில் புகுந்து விடுகிறது.
மேலும் தோட்டத்துக்குள் புகும் யானைகள், விவசாய விளைபொருள்களை நாசம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகளை விவசாயிகள் முன்வைக்கின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 2.30 மணி அளவில், சிறுமுகை அருகே லிங்காபுரம் அடுத்துள்ள காந்தையூரில் கணேசன் மற்றும் மூர்த்தியின் வாழைத் தோட்டங்களுக்குள் பாகுபலி காட்டு யானை புகுந்துள்ளது.
பின்னர் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழைப் பயிர்களை நாசம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் சிறுமுகை வனத்துறையினர், தோட்டத்துக்குள் புகுந்த பாகுபலி காட்டு யானையை விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும் யானையை விரட்டும் போது, விவசாயிகள் லைன் ஒன்னும் இல்லை (மின் இணைப்பு இல்லை ) நீ போ.. போ.. என்று சத்தம் போட்டு விரட்டினர்.
ஆயினும், பாகுபலி காட்டு யானை வனப்பகுதிக்குச் செல்லாமல் ருசி மிகுந்த வாழைக்குருத்துகளை பசியாற உட்கொண்டது. அதன் பின்னர், சுமார் 4 மணி நேரமாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் வனத்துறையினரை கதறவிட்ட பாகுபலி யானை, அதிகாலை 5.30 மணிக்கு மின் வேலியை உடைத்துக் கொண்டு தோட்டத்தை விட்டு வெளியேறி, ஆடி அசைந்தபடி வனப்பகுதியை நோக்கிச் சென்றது. மேலும், சிறுமுகை வனப்பகுதியில் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசத்தால் கிராம மக்களிடையே ஒரு விதமான அச்சம் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: சேலத்தில் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி - 178 பேர் மீது வழக்குப்பதிவு!