அயோத்தி தீர்ப்பு எதிரொலியாக கோவை கோனியம்மன் கோயில் உள்பட முக்கிய கோயில்களிலும் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய இடங்களில் ஆங்காங்கே வாகன சோதனையும் நடத்தப்பட்டுவருகிறது.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பால் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமலிருக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனையொட்டி, கோவையில் நள்ளிரவு முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். கோவை ரயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவையிலிருந்து வெளியூர் செல்லும் ரயில்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது.
ரயில்வே காவலர்களும் கோவை மாநகர காவலர்களும் இணைந்து இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கலவரம் நடக்க வாய்ப்புள்ள முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை நகரில் மட்டும் 1,800-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சமூக வலைதளங்களை உளவுத் துறை தீவிரமாகக் கண்காணித்துவருகிறது.
தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இன்று வெளியாகிறது அயோத்தி தீர்ப்பு...! - நாடு முழுவதும் உஷார் நிலை