சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமிக்கு, கோவை பீளமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தனது 50 ஆண்டு கால பொதுவாழ்விற்காக கிடைத்த அங்கீகாரம் என தெரிவித்தார். திமுக வேட்பாளராக போட்டியிடுவதை பெருமையாக கருதுகிறேன் எனவும், 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை அமைச்சராகவும் இருந்துள்ளதாகவும் கூறினார். செம்மொழி மாநாட்டின் போது கோவை நகர வளர்ச்சிக்காக திட்டங்களை செயல்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
சூலூர் தொகுதியில் விசைத்தறி மற்றும் விவசாய தொழில்கள் மேம்பாட்டிற்கு பாடுபடுவேன் எனவும், ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்தவும் முயற்சிப்பேன் எனவும் அவர் கூறினார். ஜிஎஸ்டியினால் விசைத்தறி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும், ஜிஎஸ்டி வரியினை குறைக்க திமுக, காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
கோவை-சூலூர் இடையே ஆறு வழிச்சாலை அமைப்போம் எனவும் அவர் தெரிவித்தார். ஒரு மாத காலத்தில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, சூலூர் தொகுதியில் பரப்புரையை மேற்கொள்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.