கந்தசஷ்டி கவசம் குறித்து கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கடவுள் மறுப்பாளர்களுக்கும், இந்துமத நம்பிக்கையுடையோர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்தது. பகுத்தறிவாதிகளுக்கு எதிராக பல்வேறு இந்து அமைப்பினர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இன்னும் சில இந்துத்துவா அமைப்புகள் கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் கூட கருத்துகளைத் தெரிவித்திருந்தது.
இச்சம்பவத்தையொட்டி பாஜகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர், ட்விட்டரில் பதிவிட்ட கருத்துகள் மதமோதல்களைத் தூண்டும் வகையில் உள்ளது என பலரும் விமர்சனம் வைத்திருந்தனர். இந்தச்சூழ்நிலையில், கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியாரின் முழு உருவச் சிலை மீது நேற்றிரவு (ஜூலை 16) சமூகவிரோதிகள் சிலர் காவி பெயிண்ட்டை ஊற்றியுள்ளனர்.
சிலை மீது காவிபெயிண்ட் ஊற்றப்பட்டிருப்பதைக் காலையில் பார்த்த அப்பகுதியினர் போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பெயிண்ட் ஊற்றிய சமூக விரோதிகளை காவல்துறையினர் தேடிவருகின்றனர். சமீப காலமாக சமூக விரோதிகளால் திருவள்ளூர் சிலை, அம்பேத்கர் சிலை, பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: 'தமிழ்க் கடவுளை அசிங்கப்படுத்தினால் காவிப் படை எதிர்த்து நிற்கும்' - எல். முருகன்