கோயம்புத்தூர்: வாஜ்பாய் தாமரை நல்லாட்சி என்னும் பெயரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநாடு பொள்ளாச்சி கோவை சாலையில் பிகேடிபள்ளி அருகே நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியபோது, "பிரதமர் மோடி அவர்கள் கொண்டு வந்த திட்டத்தைக் காப்பியடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தான் கொண்டு வந்த திட்டம் என அறிவிக்கிறார். தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு 1000, 2000 கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர். அக்னிபத் திட்டம் முப்படைகளின் எதிர்கால திட்டமாகும், மற்ற மாநிலங்களில் தலைவர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
முதலமைச்சர் ஸ்டாலின் நீட் தேர்வு விலக்கு என கடிதம் தினமும் எழுதிக் கொண்டு உள்ளார். திமுக முக்கிய பிரமுகர்களுக்கு தமிழ்நாட்டில் கல்லூரிகள் அதிகம் உள்ளதால் திமுக தலைவர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கொப்பரை தேங்காய் விலை ஏற்றம் செய்தால் விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும். அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது அமைச்சர் பதவிக்கு வேலை செய்யாமல் பொள்ளாச்சி பகுதியில் தனது நண்பரின் படப்பிடிப்பு நடக்கும் பகுதிக்கு அதிக நேரம் செலவிடுகிறார்.
பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி எங்கும் இல்லாத அளவுக்கு அதிகப்படுத்தி உள்ளனர். பொள்ளாச்சி பகுதியில் இருந்து கனிம வளங்கள் காவல்துறை உதவியுடன் அண்டை மாநிலமான கேரளாவுக்கு தினசரி செல்கிறது. இதைத் தடுக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடக்கும்.
பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்கப் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அழுத்தம் தரப்படும். திமுக ஆட்சியில் கொலை கற்பழிப்பு அதிகமாக உள்ளது. பிரதமர் மோடி மூலமாக நடக்கும் துறைசார்ந்த கூட்டங்களுக்கு திமுக அமைச்சர்கள் வராமல் தமிழ்நாட்டில் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு மாநிலத்தில் ஆளும் திமுக அரசு தாங்கள் செய்வது போல் கூறி பொய் பிரச்சாரம் செய்கின்றனர். பொள்ளாச்சியில் வைக்கும் தீ பொறியானது, அக்னியாக மாறப் போகிறது. வரும் 2024 தமிழ்நாட்டில் இருந்து 25 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள். இந்த மாநாட்டில் A.P.முருகானந்தம், மோகன் மந்தராசலம், பாபா ரமேஷ், துரை ஆனந்த், தனபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.