இலங்கை தாதா அங்கோடா லொக்கா மரணம் தொடர்பான வழக்கு நாள்தோறும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. சிபிசிஐடி ஏழு தனிப்படைகள் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ரா உளவு பிரிவும் இணைந்து புலன் விசாரணை செய்து வருகிறது.
உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த லொக்காவின் காதலி அமானி தான்ஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மதுரையில் குற்றப் புலனாய்வு தொடர் விசாரணை நடத்தி வருகிறது. இதில், சினிமாவில் நடிப்பதாகக் கூறி அங்கோடா லொக்கா மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கோவையில் தலைமறைவாக தங்கி இருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் சேரன் மாநகரில் தங்கியிருந்த அங்கோடா லொக்கா, தி ராயல் பிட்னஸ் கிளப் என்னும் உடற்பயிற்சி கூடத்திற்கு வழக்கமாக சென்று வந்துள்ளார்.
இது குறித்து உடற்பயிற்சி கூடத்தின் பிரபு கூறியதாவது, "2017ஆம் ஆண்டு இந்த உடற்பயிற்சிக் கூடம் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதீப் சிங் மற்றும் தியானேஸ்வரன் ஆகிய இருவரும் வந்து சேர்ந்தனர். தியானேஸ்வரன் பத்து நாள்கள் வந்து விட்டு சென்றுவிட்டார். அதன் பின் பிரதீப் சிங் தான் பொதுமுடக்கத்திற்கு முன்புவரை வந்தார்.
பிரதீப் சிங் பார்க்க திடகாத்திரமாக தான் இருப்பார். மாலைப் பொழுதில் தான் வருவார். ஒருமணிநேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு சென்று விடுவார். புல்லட்டில் தான் வருவார். யாரிடமும் அதிகமாக பேச மாட்டார். ஓரளவிற்கு தான் தமிழில் பேசுவார். அவர் வட மாநிலத்தவர் என்று இங்கு பலரும் கூறுவர். செய்தி ஊடகங்களில் இந்த செய்தி வந்த பின்பே அவர் ரவுடி என்பது தெரியவந்தது" என கூறினார்.
இதையும் படிங்: சினிமா ஆசை, மூக்கு சர்ஜரி செய்த அங்கோடா லொக்கா!