கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் போத்தனூர் நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டின் (30). இவர் போத்தனூர் மெயின் ரோட்டில் கடந்த 4 ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது ஹோட்டலில் சிவா, சாரதி, நவீன் ஆகிய 3 பேர் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இம்மூவரும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி சரிவர ஹோட்டலில் பணிபுரியாமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செபாஸ்டின் கடையில் பணிபுரிந்து வந்த சிவா, சாரதி மற்றும் நவீன் ஆகிய மூவரையும் பணியில் இருந்து வெளியேற்றியுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் காலை செபாஸ்டின் கடையில் வேலை பார்த்துவரும் மற்றொரு நண்பர் வெற்றி என்பவரை, சிவாவும் சாரதியும் நேரில் வந்து அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்துள்ளனர்.
சரமாரி தாக்குதல்: இதனால் மதுபோதைக்கு உள்ளான வெற்றி கடைக்கு வந்தபோது, அவரால் வேலை செய்ய முடியவில்லை. இதுகுறித்து செபாஸ்டின் வெற்றியிடம் விசாரித்துள்ளார். அப்போது, சிவாவும் சாரதியும் தன்னை கடைக்கு வந்து அழைத்துச் சென்றதை வெற்றி ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் தனக்கு மது வாங்கி தருவதையும் செபாஸ்டினிடம் கூறியுள்ளார்.
எனவே செபாஸ்டின் சிவாவை செல்போன் மூலம் அழைத்து, எதற்காக வெற்றியை அழைத்துச் சென்று மதுவுக்கு அடிமையாக்கி விடுகிறீர்கள் எனப் பேசியுள்ளார். இந்தப் பேச்சு வாக்குவாதத்தில் வந்தடைந்துள்ளது. இதில் ஆத்திரம் தீராத சிவா, சாரதி, நவீன் மற்றும் அவரது நண்பர் மிதுன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை, செபாஸ்டின் நடத்திவரும் ஹோட்டலுக்கு மதுபோதையில் வந்து வேண்டுமென்றே தவறாக பேசியுள்ளனர். மேலும், செபாஸ்டினை சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்கினர்.
போலீசார் விசாரணை: இதையடுத்து செபாஸ்டினின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் தாக்குதல் நடத்திய நால்வரும் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் செபாஸ்டினை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதைத் தொடர்ந்து செபாஸ்டின், போத்தனூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இவ்வாறு கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சிவா, சாரதி, நவீன், மிதுன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் ஹோட்டல் உரிமையாளர் மீது பணியிலிருந்து நிறுத்தப்பட்ட ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அரசு பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்களிடம் விசாரணை